வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல.. விழுந்த ஒவ்வொரு முறையும் மீண்டும் கம்பீரமாய் எழுந்து நிற்பது..!

Friday, March 19, 2010

சுவேதா (விகடனில் வெளியான கவிதை)

நாட்டாண்மை வீட்டு
நாயகி அக்காவும்
சேரித் தெரு
சேண்டி மாமாவும்
ஊரை விட்டு
ஓடிப் போக
ஒத்திகைப் பார்த்த
இடம்
இவளிடம்...

உடையார் வீட்டு
தென்னந்தோப்பில்
ஒளிந்திருந்து
திருடிய
ஒன்பது தேங்காயை
ஒளித்து வைத்து
தின்ற இடம்
இவளிடம்...

பத்து லிட்டர்
பால் தரும்
பார்வதியின் பசுமாடு
மேய்ந்தப் பின்
வந்து
நீர்ப் பருகி
இளைப்பாறும்
ஈர நிலம்
இவளிடம்...

பள்ளி செல்லும்
சிறுவர்கள்
பள்ளிவிட்டு
வந்தப் பின்னே
பந்தாடி மகிழும்
இடம்
இவளிடம்...

நல்லக்
காதல்களும்
பல
கள்ளக் காதல்களும்
தன்னிடம்
அரங்கேறினாலும்
யார்க்கும் சொல்லாமல்
கடைசிவரை
கன்னியம் காக்கும்
இடம்
இவளிடம்...

வயசான பெருசுகள்
வாய் அசைப் போட
மாலைப் பொழுதுகளில்
மகிழ்வோடு
உலவ வரும்
இடம்
இவளிடம்...

இவள்..
தன் வளைவுகளால்
அனைவரையும்
வசீகரித்தவள்...
வளமையும்
செழுமையும்
இவள் சொத்து..

இவள்..
எங்கள் உயிரிலும்
உணர்விலும்
கலந்த
அனைவருக்குமான
காதலி..
எப்போதும்
எங்கள் ஊரின்
கேள்வி குறி...

இவள்..
எங்கள் ஊர்
சுவேத நதி..
சுவேதா...!

No comments: